ஜான்ஸி ராணி லட்சுமி பாய் பிறந்த தினம்: “அடிமை வாழ்வைவிட மரணம் எவ்வளவோ மேல்!”

Share This
Tags

jansiநம் நாட்டின் அண்மைய சுதந்திர வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது 1857ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் நிகழ்வுகள்தான். முதல் இந்திய சுதந்திரப் போரின் 150ம் ஆண்டு நினைவை ஒட்டி ஒரு நூல் எழுதியிருந்தேன். “1857ல் தமிழ் மண்” என்ற அந்த நூலில், வட இந்தியாவில் தோன்றிய சுதந்திரக் கனல், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்பதையும், ஒருங்கிணைக்க வழிகாட்டுதல் இன்றி தமிழ் மண்ணில் அது ஒரு போராக உருவெடுக்காமல், வெறும் போராட்டமாகவே முடிந்து போன வரலாற்றையும் பதிவு செய்திருந்தேன்.

***
இந்த நிகழ்வில், பலர் ஈடுபட்டிருந்தாலும், முக்கியமான பாத்திரத்தை ஏற்றிருந்தது ஜான்ஸியின் ராணி லட்சுமி பாய்தான். அவரைக் குறித்த பதிவு இது. நவ.19., இன்று, ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் 178வது பிறந்த தினம்.
1857 ல் துவங்கிய புரட்சியில் பல தலைவர்கள் ஈடுபட்டு, ஏராளமான ஆங்கிலேயப் படையினரைக் கொன்று குவித்தார்கள். பல இடங்களில் தங்கள் சுதந்திரக் கொடியைப் பறக்க விட்டார்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் ஈடுபட்டார்கள்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் நாடுதழுவிய அளவில் 1857 புரட்சியில் ஈடுபட்டனர். இந்தப் புரட்சியில் பங்கு கொண்ட வடநாட்டினரில் குறிப்பிடத்தக்கவர்கள், நானா சாகேப் பேஷ்வா, ஜான்சி ராணி லட்சுமிபாய், பீகாரைச் சேர்ந்த பாபு கும்வர்சிங், தாதியா தோபே, ராவ்சாகப், ராஜா பேனி மாதவ சிங், பேருவா கட் தளபதி குலாப் சிங், ருயியாகட் அரசர் லக்கட்ஷா, பைஜாபாத்தைச் சேர்ந்த மவுல்வி அகமதுல்லா ஷா, நவாப் பாந்தா, சலாரி மன்னர், உஹேல்கண்ட் தளபதி கான்பகதூர் கான், லக்னோ பிரதேசத்து அரசி பேகம் ஹஸரத் மஹல், கோண்டா சமஸ்தான அரசர் தேவிபக்‌ஷ் சிங் முதலியோர்.
இவர்களில், ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தில் நானாசாகேப் பேஷ்வா முக்கிய இடத்திலிருந்தார். ஆங்கிலேயர்கள் நானே சாகேப்பை வலுவான எதிரியாகவும் கருதினார்கள். இவருடைய ஆரம்பகாலச் செயல்பாடுகள், கருத்து ரீதியாகவே அமைந்தது. முக்கியப் பிரமுகர்களையும், சிப்பாய்களையும் சென்று சந்தித்து அவர்களுக்கு சுதந்திர உணர்வைத் தூண்டும் செயலையே அவர் செய்து வந்தார். ஆரம்பகாலத்தில் லக்னோ, அம்பாலா போன்ற நகரங்களுக்குச் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிப் போராட்டத்தில் சேருமாறு முக்கியப் பிரமுகர்களையும் சிப்பாய்களையும் தூண்டினார். இந்த நானா சாகேப் பேஷ்வாதான், ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் சுதந்திர உணர்வுக்குத் தூண்டுகோலாக விளங்கியவர்.
1857ம் வருட சுதந்திர எழுச்சியின் முக்கியமான பாத்திரங்களாகக் கருதப்படுபவர் ஐவர்: மங்கள் பாண்டே, பகதூர் அன், நானா சாகேப், லட்சுமி பாய், தாதியா தோபே.
இவர்களில் ஒரு பெண் என்றாலும், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீர மங்கை லட்சுமி பாய். ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களும் இதனை தெளிவாகவே தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
***
ராணி லட்சுமிபாய் 1835இல் காசியில் பிறந்தவர். மணிகர்ணிகா என்பது அவருடைய குழந்தைப் பருவப் பெயர். மகாராஷ்டிராவில் ஜான்சி பகுதியை ஆண்ட குறுநில மன்னாரான கங்காதர ராவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு அவரது பெயரை லட்சுமி பாய் என்று மாற்றினார். இவர்களுக்கு வாரிசாக குழந்தை பிறக்காமலேயே இருந்தது. அதனால் மன்னர் கங்காதரராவ் தாமோதரன் என்ற சிறுவனை தத்து எடுத்துக் கொண்டனர். சிறிது காலத்தில் கங்காதரராவ் அகால மரணம் அடைந்தார். இந்த நேரத்தில் அப்போதைய ஆங்கிலேய கவர்னராக இருந்த டல்ஹெளஸி, ஜான்சியின் வாரிசாக ராணி லட்சுமிபாயையும் தாமோதரனையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஜான்சியை ஆங்கிலேயப் பேரரசுடன் இணைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்தோடு, மாதாமாதம் ஒரு சிறு தொகை ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கு உதவித் தொகையாக அளிப்பது என்றும் தனது ஏற்பாட்டைக் கூறினார். ஆனால் சுயகவுரவம் மிகுந்த லட்சுமிபாயோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்கிலேயரைச் சார்ந்திருந்து அடிமைத்தனமாக வாழ்வதை அவருடைய சுயகவுரவம் மிகுந்த மனது ஏற்க மறுத்தது. தகுந்த சமயத்தை எதிர்பார்த்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தக் காத்திருந்தார்.
இந்த நேரத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக ராணுவத்தில் இருந்த சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்தனர். வட இந்தியாவில் ஏற்பட்ட இந்தப் பேரெழுச்சியின் போது, ஜான்சியில் ராணி லட்சுமி பாய்க்கு ஏற்பட்ட கதியைக் கண்ட சிப்பாய்கள் அவருக்காகப் போராட முன்வந்தனர். அவர்களோடு சேர்ந்து லட்சுமிபாய் தன் கல்பி கோட்டையில் இருந்தவாறு ஆங்கிலேயரோடு போராட ஆயத்தமானார். இந்த நேரத்தில் ஜான்சியைக் கைப்பற்ற ஹுக் ரோஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி அனுப்பப் பட்டார். ஜான்சி ராணி அவர்களை எதிர்த்துப் போரிட்டார். ராணிக்குத் துணையாக தாந்தியா தோப்பேயும் போரிட்டார். ஆயினும் வலிமையான ஆயுத பலத்தால் ஆங்கிலேயப் படையே இறுதியில் வென்றது. ராணியும் தாந்தியா தோப்பேயும் அங்கிருந்து தப்பித்து, காட்டில் மறைந்து வாழ்ந்தார்கள்.
அத்தோடு போர் முடிவடைந்தது என்று ஆங்கிலேயர் நினைத்திருந்த சமயத்தில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ராணியும் தாந்தியா தோப்பேயும் திடீரென குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினார்கள். குவாலியரை ஆண்ட மன்னன் அவர்களிடம் இருந்து தப்பித்துச் சென்றான். ஆனாலும் குவாலியரில் இருந்த எண்ணற்ற படை வீரர்கள் தங்களது ஆதரவை லட்சுமிபாய்க்கு அளித்தனர். அவர்களின் துணையுடன் மீண்டும் ஆங்கில ஆட்சியாளர்களை எதிர்த்து போரிட ஆயத்தமானார். ஆனால் ஆங்கிலேயர் குவாலியர் கோட்டையைத் தாக்கினார்கள்., கடுமையாக நடந்த போரில் லட்சுமிபாய் உயிரைத் துறந்தார்.
ஆங்கிலேயர் அப்போது, வாரிசுகள் அற்ற சமஸ்தானங்கள், சிறுநாடுகளை தங்கள் ஆட்சியில் இணைத்துக் கொள்வதை சட்டபூர்வமாக்கி நடைமுறைப்படுத்தியபோது எழுந்த எதிர்ப்புக்கு ஓர் உதாரணமாக ஜான்சியில் நடந்த எதிர்ப்பைச் சொல்லலாம்.
பிற்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்த போது, அதிலுள்ள பெண்கள் பிரிவுக்கு ராணி லட்சுமிபாய் படை என்றே பெயரிட்டு அழைத்தார் என்பது, ஜான்ஸி ராணிக்க்கு பின்னர் வந்த சந்ததி கொடுத்த மரியாதைக்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.

- செங்கோட்டை ஸ்ரீராம்

About the Author

- பத்திரிகையாளர், எழுத்தாளர்

ஜான்ஸி ராணி லட்சுமி பாய் பிறந்த தினம்: “அடிமை வாழ்வைவிட மரணம் எவ்வளவோ மேல்!”