வீரத்தை பறைசாற்றும் செஞ்சிக் கோட்டை

 

senjiவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை மூன்று குன்றுகளால் சூழப்பட்டுள்ளது.

முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களாலும் பல முறை இக்கோட்டை தாக்குதலுக்கு ஆளான போதும் மாவீரன் தேசிங்கு ராஜனின் வரலாற்றை பறைசாற்றி கம்பீரமாக நம் கண் முன் காட்சி அளிக்கிறது கல்லில் உருவான இக் கலை பொக்கிஷம். கல்விச் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக திகழ்கிறது.

செஞ்சிக்கோட்டையில் சிலைகள் சில சிதிலம் அடைந்தாலும் கோட்டையின் அமைப்பு தோற்றம் ஆகியவை அற்புதமாக காட்சியளிக்கிறது. மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் அரண்மனைகள், கோட்டை கொத்தலங்கள் ஆகியவற்றை நாம் ஏட்டிலும், சினிமா செட்டிங் ஆகியவற்றில் பார்த்திருப்போம். கோட்டை என்றால் இப்படித்தான் இருக்கும்.
மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், அரசவை கூடம், தானிய சேமிப்பு, உடற்பயிற்சி கூடம், பலம் வாய்ந்த மதில்கள், கோயில்கள், மசூதிகள், கோட்டையை சுற்றியுள்ள அகழிகள் ஆகியவற்றை நேரில் கண்டு தொட்டு பார்த்து, ரசித்து உங்களை 12-ஆம் நூற்றாண்டிற்கு அழைத்து சென்று வியக்க வைக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மைசூர் தோட்டக்கலை நிபுணர்களை கொண்டு கோட்டையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடி நீர், நவீன கழிப்பிட வசதிகள் ஆகியவற்றை தொல்லியல் துறையினர் செய்துள்ளனர்.

கோட்டையின் அமைப்பு:
ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி மூன்று மலைகளை இணைத்து 5 மைல் சுற்றளவில் 80 அடி அகலமான அகழிகளாலும், 800 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோட்டை. இக் கோட்டையை சுற்றி காடுகள், மலைகள், நீர் நிலைகள், மதில்கள் என நான்கு வகை அரண்களால் பாதுகாப்பாக உள்ளது.

கோட்டை வரலாறு:
ஆனந்தகோனார் என்ற இடையர் குலத்தைச் சேர்ந்தவர் மலையில் கோட்டை ஒன்றை கட்டி ஆனந்தகிரி (ராஜகிரி) என பெயரிட்டு சுற்றுப்புற ஊர்களை இணைத்து கிபி.1200 முதல் 1240 வரை 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
பின்னர் வந்த இவரது மகன் கிருஷ்ணகோன் வடக்கே அமைந்துள்ள மலையில் கோட்டையை கட்டி கிருஷ்ணகிரி எனப் பெயரிட்டான். இவரது குமாரர்கள் கோனேரிக்கோன், கோவிந்தகோன் ஆகியோர் கிபி.1310 வரை ஆட்சி செய்தனர். கிராமத்தை காப்பாற்றும் 7 கன்னி மார்களில் ஒன்றான செஞ்சி அம்மன் பெயரில் அமைந்துள்ளதாக தள புராணங்கள் கூறுகின்றன.

பின்னர் விஜயநகரப் பேரரசை விரிவுபடுத்திய தலைமை பிரபுகளாக விளங்கிய நாயகர்களில் இருப்பிடமாக மாறியது.
கிருஷ்ணதேவராயர் தன்னுடைய பிரதிநிதியாக கிருஷ்ணப்ப நாயகரை செஞ்சியில் அமர்த்தினார். கிபி.1464 முதல் 1649 வரை ஆண்டனர். இவர்கள் காலத்தில் 3 மலைகளையும் இணைத்து கோட்டை அமைக்கப்பட்டது. மேலும் கல்யாண மஹால், நெற்களஞ்சியம், அரண்மனைகள், எண்ணெய் கிணறு, நெய் கிணறு, உடற்பயிற்சி அரங்கம் உள்ளிட்டவை கட்டப்பட்டன.

1661ல் பீஜப்பூர் சுல்தான் இந் நகரை கைப்பறினார். பின்னர் மராட்டிய மன்னர் சிவாஜி 1677ல் கைப்பற்றி 1680 வரை ஆட்சி புரிந்தார். கிபி.1691-ம் ஆண்டு மொகலாய மாமன்னர் ஒளரங்கசீப்பின் கீழ் வந்தது. 1707-ல் ஒளரங்கசீப் காலமான பிறகு அவரது மகன் ஷாஆலம் பதவி ஏற்றார்.

1708-ல் சாதத்துல்லாகான் என்பவரை ஆற்காடு நவாப்பாக நியமித்து செஞ்சி அரசின் மேற்பார்வையாளராக நியமனம் செய்தார்.

அப்போது ஆட்சி பொறுப்பில் சொரூப்சிங் என்பவர் இருந்தார். டெல்லி பாதுஷாவின் அதிசய குதிரையை அடக்க சென்ற சொரூப்சிங்கால் குதிரையை அடக்க முடியாததால் அவமானத்திற்கு உள்ளானார். தகவல் அறிந்த பாலகன் ராஜாதேசிங்கு டெல்லிக்கு சென்று குதிரையை அடக்கி தன் வீரத்தை நிலை நாட்டினான்.

டில்லியில் மொகலாய மன்னர்களின் ஆட்சி நிலை குலையத் தொடங்கியது.

இந்நிலையில் செஞ்சி அரசன் கட்ட வேண்டிய கப்பம் நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆனால் கப்பம் கட்ட சொரூப்சிங் மறுத்து ஆங்கிலேய அதிகாரியையும் சிறை வைத்தார். பின்னர் இவர் கிபி.1714-ல் இறந்துவிட்டார். தொடர்ந்து இவரது மகன் ராஜாதேங்கு செஞ்சிக்கு மன்னர் ஆனார்.

ராஜாதேசிங்கு சிங்கவரம் ரங்கநாதரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தேசிங்கு டெல்லி பேரரசுக்கு கப்பம் கட்ட மறுத்ததால் ஆர்க்காடு நவாப் செஞ்சியின் மீது படையெடுத்தான். திருமண கோலத்தில் வழுதாவூரில் இருந்த தேசிங்கின் ஆருயிர் நண்பன் மகமத்கான் செய்தியை அறிந்ததும் மணக்கோலத்தை தவிர்த்து போர்க்கோலம் பூண்டு வெகுண்டெழுந்து செஞ்சியை நோக்கி சீறிப் பாய்ந்தான்.

பின்னர் தேசிங்கு ராஜனிடம் அனுமதி பெற்று போர்களத்தில் புயலாக புகுந்து எதிரிகளை வெட்டி சாய்த்தான். கோழை ஒருவன் மகமத்கானை பின்னால் இருந்து வெட்டி வீழ்த்தினான். இதில் மகமத்தான் வீரமரணம் அடைந்தார்.
மகமத்கான் இறந்த செய்தி கேட்டு துடித்துபோன ராஜாதேசிங்கு வஞ்சகர்களை வேரோடு வெட்டி சாய்க்க பாராசாரி குதிரையின் மீது புறப்பட்டான். புறப்படும் முன் இஷ்ட தெய்வமான சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று ரங்கநாதரிடம் போருக்கு அனுமதி கேட்டான். ரங்கநாதரோ இன்று வேண்டாம். நாளை செல், என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டார். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று கூறி போருக்கு புறப்பட்டான் ராஜாதேசிங்கு.
போரில் சிங்கமாக சீறிப்பாய்ந்து நவாப் படைகளை வெட்டி வீழ்த்தினான். வெற்றியின் விளிம்பில் இருந்த தேசிங்குராஜனை வஞ்சகர்கள் சூழ்ச்சி செய்து தேசிங்கின் பாராசாரி குதிரையின் கால்களை வெட்டினர். இதில் நிலை குலைந்த தேசிங்கு குண்டடிபட்டு 30.10.1714-ல் போர்களமான கடலி கிராமத்தில் 18 வயதில் வீர மரணம் அடைந்தார்.

தகவல் அறிந்ததும் தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன் கட்டை ஏறினார். இன்றும் கடலி கிராமத்தில் தேசிங்கு ராஜன், நண்பன் மகமத்கான், பாராசாரிகுதிரை ஆகிய சமாதிகள் உள்ளன. செஞ்சிக்கோட்டையில் ராணிபாய் சமாதி உள்ளது.
பின்னர் ஆங்கிலேயர்கள் சிறுது காலம் செஞ்சியை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்களும் செஞ்சியை விட்டு சென்னை சென்று தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். இதன் அடிப்படையில் தோன்றியதே செஞ்சி அழிந்து சென்னைப்பட்டணம் ஆனதாக கூறுவர்.

செஞ்சிக்கோட்டையில் பார்க்க வேண்டிய இடங்கள்:

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் பராமரித்து பாதுகாக்கப்படும் இக்கோட்டையில் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும். வேலூர் வாயில், சாதத்துல்லாகான்மசூதி, பாண்டிச்சேரி வாயில், வேங்கடரமணர் ஆலயம் (வழிபாடு இல்லை), ராஜகிரி மலை நுழைவு வாயிலில் உள்ள சுழலும் பீரங்கி, கல் பட்டரை, மனதை கொள்ளை கொள்ளும் கல்யாணமஹால், சிப்பாய்கள் தங்கும் அறைகள், குதிரை லாயங்கள், யானைக்குளம், வெடி மருந்து கிடங்கு, உடற் பயிற்சி கூடம், போர்கருவிகளை வைக்கும் இடம், பிரம்மாண்டமான தானியக் களஞ்சியம், வேணுகோபால் சுவாமி கோயில் (சிதிலம் அடைந்து உள்ளது.)

ஏழு கன்னிமார்கள் கோயில், தேசிங்கு உடல் எரியூட்டபோது மனைவி ராணிபாய் உடன் கட்டை ஏறிய இடம். சர்க்கரை குளம், செட்டிக்குளம், வீரஆஞ்சநேயர் ஆலயம் (வழி பாட்டில் உள்ளது.) மரணக்கிணறு, சாதத்துல்லாகான் மசூதி இவை அனைத்தும் கோட்டையின் கீழ் அமைந்துள்ளது.

இனி ராஜகிரி மலை (ராஜா கோட்டை) மீது பார்க்க வேண்டிய இடங்கள்:
பாலரங்கநாதர் கோயில், குளம், மண்டபம், கமலக்கன்னியம்மன் கோயில் வழிபாட்டில் உள்ளது. இழுவைபாலம், தானியக் களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், மணிக்கூண்டு, பீரங்கி ஆகியவை.
அடுத்து கிருஷ்ணகிரி மலை கோட்டையில் பார்க்க வேண்டிய இடங்கள்:

(ராணிகோட்டை)
சுழலும் பீங்கி மேடை, நெற்களஞ்சியம், ரங்கநாதர் கோயில், எண்ணெய் கிணறு, தர்பார் மண்டம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தின் கீழ் உள்ள பூவாத்தம்மன் கோயில்.

சந்திரகிரி மலை மீது செல்வது சற்று சிரமம். இங்கு இயற்கை சுனைகள், மண்டபம், சமண முனிவரின் பாதச்சுவடுகள், கோயில்கள் உள்ளன. கைதிகளின் பாதாள சிறை வட்ட வடிவில் கிணறு போன்ற அமைப்பில் உள்ளது. மேலும் ஏராளமான வரலாற்றுடன் கூடிய அறிவியல் அதிசயங்கள் இங்கே புதையுண்டு இருக்கின்றன.

தமிழக அரசு இந்த கோட்டையை சுற்றுலா மையமாக அறிவித்து தங்கும் வசதி, உணவு விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வெளி நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

செஞ்சிக்கு செல்ல பஸ் வசதிகள்:
சென்னை- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர்.

வீரத்தை பறைசாற்றும் செஞ்சிக் கோட்டை